சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு
சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு செய்தார்.
சாத்தூர்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு நடைபெற்று வந்த சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூட்டுக் குடிநீர் திட்ட சோதனை ஓட்ட நிகழ்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தண்ணீரை அவர் குடித்தும் பார்த்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
விருதுநகர், சாத்தூர், சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 755 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு சீவலப்பேரியை தலைமையிடமாக வைத்து கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த கடந்த 2010-ல் ரூ.234 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலனடைவார்கள்.
தற்போது, அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே தாமிரபரணி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 210 லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு, பின்பு முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு நீரேற்றும் எந்திரங்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள உப்பத்தூர் விலக்கு நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்பு நடுவப்பட்டி மற்றும் பாவாலி விலக்கு ஆகிய இடங்களில் உள்ள பிரதான தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 156 தரைமட்ட நீர்த் தேக்க தொட்டிகள் மூலம் 755 ஊரக குடியிருப்புகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக 6 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் 1357 கி.மீ. நீளத்திற்கு நீரேற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சாத்தூர் நகராட்சிக்கு அரசு பல கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இருக்கன்குடி அணைக்கட்டு பகுதியில் ரூ.3 கோடி செலவில் 2 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்து, தலைமை நீரேற்று நிலையம் வரை நீர் உந்து குழாய்கள் அமைத்து பணிகள் முற்றிலும் முடிவடைந்து, சாத்தூர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் நகராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர்திட்டம் ரூ.450 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாத்தூர் நகராட்சிக்கு மேலும் குடிநீர் வழங்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சாத்தூர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த இடங்களில் புதிதாக தார்ச்சாலை அமைப்பதற்கும், பேவர் பிளாக் கல் பதிப்பதற்கும் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. இவ்வாறு கூறினார்.
இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜசேகர், நிர்வாக பொறியாளர் விஸ்வலிங்கம், உதவி நிர்வாக பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், பாலசுப்பிரமணியன், உதவிபொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.
சிவகாசியில் முஸ்லிம் ஷாபி மத்ஹப் பெரிய பள்ளிவாசல் ஜமாத் திருமண மண்டப அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு புதிய திருமண மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பால்வளத்துறை சார்பில் ரூ.100 கோடியில் நாட்டுமாடுகள் இனவிருத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்கட்ட மைப்பு வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து நல்ல தீர்ப்பு வரும். விரைவில் பட்டாசு ஆலைகள் திறக்கப்படும். இந்த பிரச்சினை குறித்து பட்டாசுஆலை அதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் அதற்கு நாங்கள் ஆதரவாகத் தான் இருப்போம். பட்டாசுக்காக சட்டமன்றத்தில் தனி சிறப்பு தீர்மானம் போட வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சியில் இது தொடர்பாக ஒரு தவறான பிரசாரம் நடந்து வருகிறது. கமலஹாசன் அரசியல் அஸ்தமித்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story