பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக சிவகாசியில் குழந்தைகள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டம்


பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக சிவகாசியில் குழந்தைகள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:19 AM IST (Updated: 10 Feb 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்ந்து பழையபடி பட்டாசு ஆலைகள் திறக்க ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிவகாசியில் வருகிற 24-ந்தேதி குழந்தைகள் பங்கு கொள்ளும் மாரத்தான் போட்டி நடத்த ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் ஏற்பாடு செய்துள்ளது.

சிவகாசி,

சிவகாசியில் கடந்த 3 மாதமாக பட்டாசு ஆலைகள் இயங்காமல் பூட்டி கிடக்கிறது. இந்த தொழிலுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்கி பட்டாசு உற்பத்திக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் பல வகையான போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜே.சி.ஐ.சிவகாசி டைனமிக் சார்பில் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்ந்து பழையபடி பட்டாசு ஆலைகள் திறக்க ஆதரவு தெரிவிக்கும் வகையில் குழந்தைகள் பங்கு பெறும் மாரத்தான் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி வருகிற 24-ந்தேதி காலை சிவகாசி நகராட்சி அண்ணாமலை-உண்ணாமலை பள்ளியில் இருந்து தொடங்குகிறது. போட்டிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இதில் முதல் பிரிவில் 4,5 வயது குழந்தைகள் மட்டும் பங்கு கொள்கிறார்கள். இவர்களுக்கு ½ கிலோ மீட்டர் பந்தைய தூரமாக இருக்கும். 6,7,8 வயதானவர்களுக்கு 1 கிலோ மீட்டர் பந்தய தூரமாக இருக்கும். 9,10,11,12 வயது சிறுவர்களுக்கு 2 கிலோ மீட்டர் தூரமும், 13,14,15 ஆகிய வயது உடைய சிறுவர்களுக்கு 3 கிலோ மீட்டர் பந்தய தூரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாரத்தான் போட்டிக்கான ஆடை அறிமுக விழா மற்றும் லோகோ அறிமுக விழா நடைபெற்றது. ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் அமைப்பின் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பட்டாசு ஆலை அதிபர்கள் காளஸ்வரி ஏ.பி.செல்வராஜன், மகேஸ்வரன், அசோகன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். பின்னர் இது குறித்து ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் அமைப்பின் தலைவர் பாலாஜி கூறியதாவது:-

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வேலை இல்லாமல் இருப்பதால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை விருதுநகர் மாவட்டத்தை கடந்து பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இந்த தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும், அதன் மூலம் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்களை பற்றியும் பதிவு செய்யவே இந்த மாரத்தான் போட்டியை நடத்துகிறோம். இதில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.

Next Story