மாவூர் வாக்குச்சாவடியை மாற்றியதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு
திருவாடானை தாலுகா மாவூர் வாக்குச்சாவடியை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா திணையத்தூர் கிராமத்தில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மாவூர் முன்னாள் ஊராட்சி தலைவர் காளிமுத்து மற்றும் கங்கானனேரேந்தல் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் மாதிரி வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது மாவூர் கிராமத்தில் காலம் காலமாக இரண்டு வாக்கு சாவடிகள் செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு வாக்குச்சாவடியை திணையத்தூர் கிராமத்திற்கு தேர்தல் அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர்.
இதனால் மாவூர் ஊராட்சி கங்கானனேரேந்தல் கிராமத்தில் உள்ள சுமார் 486 வாக்காளர்கள் 5 கிலோமீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குச்சாவடியை மாற்றும் முன்பு பொதுமக்களின் கருத்தை கேட்டறியாமல் மாற்றம் செய்து விட்டனர். எனவே ஏற்கனவே செயல்பட்டு வந்தது போல மாவூர் கிராமத்திலேயே மீண்டும் கங்கானனேரேந்தல் கிராமத்தை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் மற்றும் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கை குறித்து திருவாடானை தாசில்தார் மூலம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த கோரிக்கையை மனுவாக தாசில்தாரிடம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் அதிகாரிகள் பொதுமக்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.