மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடு குறித்த செயல்முறை விளக்கம் மாவட்ட நிர்வாகம் தகவல்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடு குறித்த செயல்முறை விளக்கம் மாவட்ட நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2019 11:01 PM GMT (Updated: 9 Feb 2019 11:01 PM GMT)

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடு குறித்து மாவட்டத்தில் உள்ள 1,348 வாக்குசாவடிகளில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளதாக என்று சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பவர்கள், தாங்கள் வாக்களித்த சின்னத்தை தெரிந்து உறுதி செய்து கொள்ளும் வகையில், வாக்களித்த சின்னம் தெரியும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுமேலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் வாகனங்களின் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்த வாகனங்களை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:– இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடு குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கும், தலா 4 வாகனங்கள் வீதம் 16 வாகனங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கி தேர்தல் அறிவிப்பு வரை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அனைத்து வாக்குப்பதிவு மையங்கள் வாரியாக வாக்காளர்களை சந்தித்து, வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியின் செயல் குறித்து விளக்கப்படும்.

இதில் வாக்காளர், வாக்களித்த வேட்பாளர்கள் வரிசை எண், பெயர் மற்றும் வேட்பாளரின் சின்னம் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய அச்சிட்ட தாளை 7 வினாடிகளுக்கு பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம், வாக்காளர்களாகிய நீங்கள் தேர்வு செய்து வாக்களித்த வேட்பாளருக்கு தான் உங்கள் வாக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும், சரிபார்க்கவும் அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள 1,348 வாக்குசாவடிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த செயல் முறை விளக்க நிகழ்ச்சி நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் விழிப்புணர்வு வாகனத்தின், உறுதி செய்யும் கருவியின் செயல்பாடு குறித்து தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ், தாசில்தார்கள் பஞ்சவர்ணம், ராஜா மற்றும் தேர்தல் துணை தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story