திருபுவனை அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருபுவனை அருகே நர்சிங் படித்து வரும் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை,
திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் வி.வி.நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் உளுந்தூர்பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரேமாவதி. இவர்களுடைய மூத்த மகள் சிந்துஜா (வயது 18). இவர் தனியார் மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவி சிந்துஜாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே நர்சிங் படிக்க விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அதனை பெற்றோரிடம் தெரிவித்தும் அவர்கள் ஏற்காததால் சிந்துஜா விருப்பமின்றி படித்து வந்தார். அதனால் அவர் மன உளைச்சலுடன் கல்லூரிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பிரேமாவதி மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிந்துஜாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் மாலை சிந்துஜா பரிதாபமாகச் செத்தார்.
இது குறித்து திருபுவனை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.