புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. சீத்தா வேதநாயகம் நேற்று மரணமடைந்தார்.
புதுச்சேரி,
புதுவை தெற்கு மாநில தி.மு.க. அவைத்தலைவராக இருந்தவர் சீத்தாவேதநாயகம் (வயது 83). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று நண்பகல் 12.30 மணி அளவில் மரணமடைந்தார். அவரது உடல் புதுவை தேங்காய்த்திட்டு புருஷோத்தம நாயக்கர் வீதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் உள்பட தி.மு.க.வினர் பலரும் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இவரது உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தேங்காய்த்திட்டு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
சீத்தாவேதநாயகம் கடந்த 1980–ம் ஆண்டு நடந்த தேர்தலில் உப்பளம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 1983 வரை எம்.எல்.ஏ.வாக பணியாற்றி உள்ளார். மேலும் 1997–ம் ஆண்டு முதல் ஜானகிராமன் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் சுமார் 4 ஆண்டுகள் நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
இவர் தி.மு.க.வின் புதுவை மாநில பொருளாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது தெற்கு மாநில தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வந்தார். 1969–ம் ஆண்டு புதுவை நகராட்சி உறுப்பினரகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.