காங். சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காவிட்டால் மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடுவேன் சுமலதா அம்பரீஷ் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காவிட்டால் மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று சுமலதா அம்பரீஷ் தெரிவித்துள்ளார்.
மண்டியா,
மண்டியா மாவட்டம் நாகமங்களாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்துக்கு சொந்தமான காலபைரேஷ்வரா கோவிலில் நேற்று சுமலதா அம்பரீஷ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசியலுக்கு வருபவர்கள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தங்களது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்கள் என்று கூறுகின்றீர்கள். அதுபற்றி எனக்கு தெரியாது. நான் இங்கு வர வேண்டும் என்று 2 மாதங்களுக்கு முன்பே நினைத்திருந்தேன். இப்போது தான் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் தான் வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன்.
என்னுடைய கணவர் அம்பரீஷ் அரசியலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மண்டியா மாவட்ட மக்கள் மீது அவருக்கு இருந்த அன்பு மட்டும் குறையவில்லை. அவருடைய அந்த அன்பு, பாசத்தை நான் நிறைவேற்ற விரும்புகிறேன். எனது கணவரின் ஆசை என்னவோ அதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அதற்கான காலம் கூடி வரும்.
அம்பரீஷ் கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். இதனால் நான் காங்கிரசில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். ஒருவேளை மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளருக்கு டிக்கெட் கொடுத்தால், ரசிகர்களின் விருப்பப்படி நடந்துகொள்வேன். என்னுடைய கணவர் அம்பரீசின் ஆதரவாளர்கள், ரசிகர்கள் நான் மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட விரும்பினால், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு சுமலதா கூறினார்.
மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளதால், காங்கிரசில் இருந்து அவருக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால், சுயேச்சையாக போட்டியிடுவேன் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story