அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு, சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 64 பேர் காயம்
சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 64 பேர் படுகாயமடைந்தனர்.
சின்னமனூர்,
சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் ஏழைகாத்தம்மன் வல்லடிகாரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாத திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. முன்னதாக ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரி ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 700-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதேபோல் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.
இதையடுத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு இறுதியாக 549 காளைகளும், 340 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளை வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை.
இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன. நாலுகால் பாய்ச்சலில் களத்தில் புகுந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் சில காளைகள் வீரர்களின் இறுக்கமான பிடிக்கு பணிந்தன. சில காளைகள், களத்தில் வீரர்களை கொம்புகளால் குத்தி தூக்கி வீசும் காட்சியையும் காண முடிந்தது. இதனால் அவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அந்த காளைகளை பிடிக்காமல் சிதறி ஓடினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், வெள்ளிக்காசுகள், பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. பரபரப்பாக நடந்த ஜல்லிக்கட்டின் முடிவில், காளைகள் முட்டியதில் 64 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு கேலரி அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிலர் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை காண உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், அ.தி.மு.க. சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story