கூடலூரில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி


கூடலூரில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 Feb 2019 4:00 AM IST (Updated: 10 Feb 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் ஒட்டாண்குளத்தில் மூழ்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுவதாவது:-

கூடலூர், 

கூடலூர் நகராட்சி 15-வது வார்டு கன்னிகாளிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு குமார் தனது நண்பர் செல்வம் (25) என்பவருடன் கூடலூரில் உள்ள ஒட்டாண்குளம் கரை பகுதிக்கு வந்தார். சின்னமடை அருகே நடந்து வந்தபோது குமார் எதிர்பாராமல் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப் படுகிறது. இதைக்கண்ட செல்வம் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அந்த பகுதியில் நின்றவர்களிடம் நடந்த விவரத்தை கூறி உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களும் குளத்தில் குதித்து குமாரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இரவு நேரமாகியதால் குளத்தில் இறங்கி குமாரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்பு நேற்று காலையில் கம்பம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின்பு குமாரை பிணமாக மீட்டனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story