வேலூர் அருகே மரங்களை வெட்டி சுங்கச்சாவடி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


வேலூர் அருகே மரங்களை வெட்டி சுங்கச்சாவடி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 3:30 AM IST (Updated: 10 Feb 2019 11:35 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே சந்தனக்கொட்டாய் பகுதியில் மரங்களை வெட்டி சுங்கச்சாவடி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கணியம்பாடி, 

வேலூர் அருகே வேலூர் -ஆரணி மெயின் ரோடு பகுதியில் வல்லம் ஊராட்சி சந்தனக்கொட்டாய் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி சுங்கச்சாவடி அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த இடத்தில் சுங்கச்சாவடி அமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பெயரளவில் மட்டுமே தேசிய நெடுஞ்சாலை எண்- 234 (அதாவது தூத்துக்குடி -மங்களூரு தேசிய நெடுஞ்சாலை) என அறிவித்து, சாலை விரிவாக்கும் பணி நடைபெற்றது. ஆனால் இப்பணி 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

மேலும் கண்ணமங்கலம் வழியாக நாகநதியில் மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.

ஏனெனில் விரிவாக்கம் செய்த சாலை ஆங்காங்கே சில இடங்களில் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சாலை சரியான முறையில் பராமரிப்பின்றி உள்ளது. மேலும் சுங்கச்சாவடி அமைத்தால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்போருக்கு பாதிப்பு ஏற்படும். அருகிலுள்ள விளை நிலங்கள், காடுகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும்.

பழமையான மரங்களை வெட்டி குறுகலான சாலையில் சுங்கச்சாவடி அமைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த வகையில் சுங்கச்சாவடி அமைப்பதை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Next Story