இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு, கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தகவல்


இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு, கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2019 4:00 AM IST (Updated: 10 Feb 2019 11:36 PM IST)
t-max-icont-min-icon

‘இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு உள்ளது‘ என்று கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தெரிவித்தார். கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளர் புகழேந்தி தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி, 

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபகாலமாக உளற ஆரம்பித்துவிட்டார். தனிப்பட்ட முறையில் அவருக்கு என்ன பாதிப்பு என்று தெரியவில்லை. இந்த அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இவர்கள் மீதான வழக்கு, எந்த நேரத்திலும் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. அப்போது அவர்கள் பதவியை இழப்பார் கள்.

ஓ.பன்னீர்செல்வம் பதவியை இழக்கும் காலம் நாட்கள் கணக்கில் தான் உள்ளது. வேறு வழியில்லாமல் தற்போது அவர் தடுமாறுகிறார். ஓசூர் உள்பட 21 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தயார் என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்காது என்று சொல்லிக் கொண்டு இருந்தார்களே, அவர்களுக்கு (அ.தி.மு.க.) இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போகும் சூழல் வந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டால் உடனடியாக எங்களுக்கு குக்கர் சின்னத்தை கொடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரத்துக்குள் கோர்ட்டு முடிக்கச் சொல்லி இருக்கிறது.

அப்படி என்றால் என்ன முடிவு எடுக்க முடியும்? சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கொடுப்பதா? எங்களுக்கு கொடுப்பதா? அல்லது தடை செய்து வைப்பதா? என்று முடிவு எடுக்கும்.

தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இது தான் சட்டம். கழுத்தில் கத்தி தொங்குவது எங்களுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தான். முடிந்தால் சின்னத்தை காப்பாற்றிக்கொள்ளட்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும். பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.வுக்கான வேட்பாளர் பட்டியலை கூட மோடி தான் பரிசீலனை செய்து வெளியிட போகிறார். எங்களை குடும்ப ஆட்சி என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். தற்போது தேனி நாடாளுமன்ற தொகுதியில் தனது மகனை நிறுத்த முயற்சிக்கிறார். அவருடைய தம்பியை கட்சியை விட்டு நீக்கினார்கள். மறுநாளே சேர்த்துக் கொண்டார்கள். அவர் குடும்பத்துக்கு ஒரு நீதி, மற்ற குடும்பத்துக்கு ஒரு நீதி என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ சிறைக்கு செல்வதை யாராலும் காப்பாற்ற முடியாது. அடித்த கொள்ளைகள் எல்லாம் பட்டியலிட்டு ஆதாரத்தோடு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story