மேல்மலையனூர் அருகே, ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - 6 பேர் படுகாயம்
மேல்மலையனூர் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
மேல்மலையனூர்,
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இசக்கி மனைவி ஞானாம்பாள்(வயது 52). இவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(39), லாவண்யா(25), சென்னை கடப்பேரியை சேர்ந்த உதயசங்கர்(51), ராஜாத்தி(48), அக்ஷயா(5), கவின்(3), கார்த்திக்ராஜன்(19), சீதாபுரத்தை சேர்ந்த சரவணன்(29), பாபு(38) ஆகியோருடன் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அரசு பஸ் மூலம் செஞ்சிக்கு வந்தார். பின்னர் அவர்கள் 10 பேரும் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு செஞ்சியில் இருந்து மேல்மலையனூருக்கு புறப்பட்டனர்.
மேல்மலையனூர் அடுத்த கன்னலம் பாலம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஞானாம்பாள், சுரேஷ்குமார் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். அக்ஷயா, கவின், கார்த்திக்ராஜன் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதற்கிடையே தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் ஞானாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மீதமுள்ள 6 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story