தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 35 வீரர்கள் காயம்
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 35 வீரர்கள் காயம் அடைந்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவில் நேற்று நடந்தது. திருக்கானூர்பட்டி விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
காளைகள் திறந்து விடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதே போல் காளைகள் பார்வையாளர் பகுதிக்கு சென்று விடாதபடி தடுக்க இரும்பு தடுப்புக்கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக திருச்சி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அதிகாலை முதலே கொண்டுவரப்பட்டன. மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத்தொடங்கினர். மாடுபிடி வீரர்களுக்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையிலான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மேலும் காளைகளை அடக்க வந்திருந்த வீரர்கள் மதுஅருந்தி உள்ளார்களா? அல்லது புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா, என்று சோதனை நடத்தப்பட்டது. தகுதியில்லாத வீரர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப்படவில்லை. மாடுபிடிக்க தகுதியான வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டன.
இதே போல் காளைகளுக்கு கால்நடைத்துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உதவி இயக்குனர்கள் ரவிச்சந்திரன், பழனிசாமி, ஈஸ்வரன், பாஸ்கரன், சையது அலி, புகழேந்தி, கால்நடை மருத்துவர் சையதுசெரீப் உள்பட 50-க்கும் மேற்பட்ட குழுவினர் 8 குழுக்களாக பிரிந்து கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதன் தொடக்க விழாவிற்கு பரசுராமன் எம்.பி. தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான பிலிப் வரவேற்றார். ஜல்லிக்கட்டை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் சேகர் எம்.எல்.ஏ., பால்வள தலைவர் காந்தி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் துரை.வீரணன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், குருங்குளம் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனிசவுந்தர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ் நன்றி கூறினார்.
முதலில் அந்தோணியார் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின்னர் வரிசையாக ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அவைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. ஒரு காளையை ஒருவீரர் மட்டுமே அடக்க வேண்டும். மாறாக குழுவாக அடக்கினால் பரிசு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் விரட்டிப்பிடித்து அடக்கினர்.
பல காளைகள் வீரர்களை முட்டித்தள்ளிக்கொண்டு சீறிப்பாய்ந்தன. அப்போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஒரு சில காளைகளை வீரர்களால் நெருங்க முடியவில்லை. அடக்க வந்த வீரர்களை காளைகள் தூக்கி பந்தாடின. அப்போது வீரர்கள் அருகில் இருந்த இரும்பு தடுப்புக்கம்பிகள் மீது ஏறி நின்று கொண்டனர்.
அடங்காத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. தங்க நாணயம், மோட்டார்சைக்கிள், வெள்ளி பொருட்கள், சைக்கிள்கள், குத்து விளக்கு, மின்விசிறி, மிக்சி, பீரோ, கட்டில், சில்வர் பாத்திரங்கள், குக்கர் போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. அடக்க முடியாத காளைகளுக்கு, அதன் உரிமையாளர்கள் பரிசுகளை பெற்றுச்சென்றனர். இந்த ஜல்லிக்கட்டில் 302 வீரர்கள் பங்கேற்றனர். வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டையொட்டி தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மேற்பார்வையில், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
ஜல்லிக்கட்டு காலை 7.50 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 752 காளைகள் பதிவுசெய்யப்பட்டு இருந்தன. ஆனால் 640 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட 35 மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் காயம் அடைந்தனர்.
மொத்தம் 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தை சேர்ந்த பெண் போலீஸ் திராவிடமணி, ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரர் செந்தில்வேலன், ஆயுதப்படை பிரிவு பெண் போலீஸ் வினிதா, சுரேகா ஆகியோரும் அடங்குவர். இதில் 3 பெண் போலீஸ் உள்பட 34 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story