மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Feb 2019 3:30 AM IST (Updated: 11 Feb 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தர்மபுரி, 

இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர்கள் சரிபார்க்கும் காதித தணிக்கை சோதனை எந்திரம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் பொருட்டு செயல்முறை பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது தொடர்பான செயல்முறை பயிற்சி முகாம்கள் நடத்துவற்காக நடமாடும் வாகனங்கள் கிராமங்கள் தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடமாடும் வாகனங்களை கலெக்டர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சிவன் அருள், தாசில்தார் கேசவமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் மலர்விழி கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,472 வாக்குச்சாவடி மையங்களிலும் சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித சோதனை எந்திரம் குறித்து வாக்காளர்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு செயல்முறைவிளக்க பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

இதற்காக மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகள் வாரியாக நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு காகித சோதனை எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கத்தை செய்து காண்பிக்கிறார்கள். இதை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறினார்.


Next Story