மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 400 பயனாளிகளுக்கு கறவைமாடுகள் வழங்க இலக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 400 பயனாளிகளுக்கு கறவைமாடுகள் வழங்க இலக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2019 3:45 AM IST (Updated: 11 Feb 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 400 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

பாலக்கோடு,

பாலக்கோட்டில் பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள் மற்றும் தும்பலஅள்ளியில் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான் தலைமை தாங்கினார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 200 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள் மற்றும் 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:–

கிராமப்புற ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கோழிப்பண்ணை தொழிலில் பெரிய அளவில் அவர்களை ஈடுபட வைத்து நிலையான வருமானத்தை பெறவும் விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த திட்டம் 1,600 பயனாளிகளுக்கு ரூ.102.9 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 400 பயனாளிகளுக்கு கறவைமாடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக 200 பயனாளிகளுக்கு கறவைமாடுகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 200 பயனாளிகளுக்கு கொள்முதல் செய்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் 4,679 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 4,232 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 447 பயனாளிகளுக்கு கொள்முதல் செய்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை பெறும் பயனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பயனடையவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தர்மபுரி உதவி கலெக்டர் சிவன் அருள், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜமனோகரன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் நாகராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் சங்கர், தாசில்தார்கள் வெங்கடேஸ்வரன், கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், தனபால், வடிவேலன், வெங்கட்டரமணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story