வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரசாமி கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரசாமி கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகப்பட்டினம்,
நாகை வெளிப்பாளையம் ஆனந்தவல்லி அம்மன், அகஸ்தீஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தையொட்டி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசிமக பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் விநாயகர் வழிபாடு, அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, அய்யனார், பிடாரி உற்சவம், காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதணை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்மன், அகஸ்தீஸ்வரசாமி பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு எண்திசை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், சாமி வீதி உலாவும் நடைபெற்றது.
தேரோட்டம்
விழா நாட்களில் தினமும் சிம்ம வாகனம், பூத வாகனம், யானை வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனம், ரிஷப வாகனம், கைலாச வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி சாமி வீதி உலா நடை பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. தொடர்ந்து நடராஜர் தீர்த்தம் நிகழ்ச்சியும், 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாசி மகம் தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், கடற்கரைக்கு சாமி புறப்பாடு மற்றும் சமுத்திர தீர்த்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந்தேதி (சனிக்கிழமை) தியாகராஜர் மரகதலிங்கம் வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 21-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு நடக்கிறது. 22-ந்தேதி புஷ்ப பல்லக்கு வீதி உலாவும், 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணமும், 26-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story