கீழ்வேளூர் அருகே பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்தது; தொழிலாளி சாவு


கீழ்வேளூர் அருகே பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்தது; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 Feb 2019 3:45 AM IST (Updated: 11 Feb 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். உடனே பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்வேளூர், 

கீழ்வேளூரை அடுத்த கோவில்கடம்பனூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரமேஷ்கண்ணன் (வயது 40), கமல் (30) ஆகிய 2 பேரும் நேற்றுமுன்தினம் இரவு தேவூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இலுப்பூர்சத்திரம் அருகே வந்த போது சாலையோரம் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்ததில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமல் பரிதாபமாக இறந்தார். அங்கு ரமேஷ்கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளத்தை மூட வேண்டும்

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி-கீழ்வேளூர் சாலையில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது என்றும், உடனடியாக சாய்ந்த விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி பள்ளத்தினை மூட வேண்டும் என்றும் கடந்த 7-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளின் மெத்தன போக்கால் ஒரு உயிர் பலியாகியுள்ளது. எனவே, இன்னொரு விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story