ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பெண் படுகாயம் மானபங்கம் செய்ய முயன்றவரிடம் இருந்து தப்பிய போது பரிதாபம்


ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பெண் படுகாயம் மானபங்கம் செய்ய முயன்றவரிடம் இருந்து தப்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:45 PM GMT (Updated: 10 Feb 2019 7:33 PM GMT)

மானபங்கம் செய்ய முயன்றவரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த பெண் படுகாயமடைந்தார்.

மும்பை,

மும்பையை சேர்ந்த 30 வயது பெண் பரேலில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் பரேல் செல்வதற்காக சி.எஸ்.எம்.டி.யில் பிளாட்பாரத்தில் நின்ற ஒரு ரெயிலில் ஏறினார். அந்த பெண், மோட்டார் மேன் கேபின் அருகில் உள்ள பெண்கள் பெட்டியில் உட்கார்ந்து இருந்தார். வேறு யாரும் அந்த பெட்டியில் இல்லை.

இந்த நிலையில் ரெயில் புறப்படும் நேரத்தில் திடீரென ஒருவர் பெண் இருந்த பெட்டியில் ஏறினார். அவர் நேராக பெண்ணுக்கு அருகில் வந்து உட்கார்ந்தார். உடனே பெண், அந்த நபரை பெண்கள் பெட்டியில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார். ஆனால் அவர் இறங்கவில்லை. இதற்கிடையே ரெயில் புறப்பட்டது.

ஆண் பெட்டியில் ஏறியதால், அந்த பெண் வாசல் அருகே வந்து நின்றாா். அடுத்த ரெயில்நிலையத்தில் ரெயில் நின்றவுடன் இறங்க அவர் நினைத்தார். இந்தநிலையில் மின்சார ரெயில் மஸ்ஜித் ரோடு ரெயில்நிலையத்தில் நிற்காமல் சென்றது. அப்போது தான் அந்த ரெயில் பணிமனைக்கு செல்வதை பெண் தெரிந்து கொண்டார். இந்தநிலையில் பெட்டியில் இருந்த நபர் பெண்ணை மானபங்கம் செய்ய அவரை நெருங்கி வந்தார். இதில் அவர் தொட முயன்ற போது பெண் தன்னை காப்பாற்றி கொள்ள ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார்.

படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை ரெயில்வே போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் ரெயிலில் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற நபரை தேடி வருகின்றனர்.

Next Story