கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்
கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்தது. இதேபோல் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. இக்காலக்கட்டங்களில் கேரளாவிலும் கனமழை பெய்தது. இதனால் மழையின் தீவிரம் கூடலூர் பகுதியிலும் அதிகமாக இருந்தது.
இதில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் 15 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையிலும் விரிசல்கள் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு ராட்சத பாறைகள் வெடிகள் வைத்து தகர்க்கப்பட்டு, ஒருபக்கமாக வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழைக்காலமாக இருந்ததால் பாறைகள் விழுந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் மேலும் சாலை சேதம் அடைந்தது. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே பாறைகள் விழுந்த பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ராட்சத தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இனி வரும் காலத்தில் வாகன போக்குவரத்து துண்டிக்காத வகையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனிடையே மலைப்பாதையில் கட்டுமான பணி நடைபெறுவதால் இருபுறமும் வாகன போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story