ஜெயலலிதா பிறந்தநாள் விளையாட்டு போட்டிகள் நிறைவு: 1,302 பேருக்கு ரூ.45 லட்சம் பரிசுத்தொகை அமைச்சர் வழங்கினார்


ஜெயலலிதா பிறந்தநாள் விளையாட்டு போட்டிகள் நிறைவு: 1,302 பேருக்கு ரூ.45 லட்சம் பரிசுத்தொகை அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Feb 2019 11:00 PM GMT (Updated: 10 Feb 2019 8:34 PM GMT)

ஜெயலலிதா பிறந்தநாள் விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன. இதில் சிறப்பிடம் பெற்ற 1,302 பேருக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர், 

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்தஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி, கரூர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் மண்மங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் பொதுமக்களுக்கு இடையேயான கிரிக்கெட் மற்றும் கபடி போட்டிகளை கடந்த 2-ந்தேதி மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஒன்றியம், நகராட்சி வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு மோதின. போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானம், அரவக்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளி, செல்லாண்டியம்மன் கோவில், சின்னதாராபுரம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் திடல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. 3-ந்தேதியும் போட்டிகள் நடைபெற்றன.

ஒன்றிய மற்றும் நகர அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று இறுதி போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்தது. இதேபோல் கிரிக்கெட் இறுதி போட்டியும் நடந்தது.

இதற்கிடையே நேற்று மாலை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டிகளை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் உழவர்சந்தை, லைட்அவுஸ் கார்னர், திருமாநிலையூர், சுங்ககேட், ராமகவுண்டனூர், பசுபதிபாளையம், ஐந்து ரோடு, சர்ச் கார்னர், திண்ணப்பா கார்னர், திருக்காம்புலியூர், கோவைரோடு வழியாக சென்று மைதானத்தை அடைந்தனர். வீராங்கனைகளுக்கு மட்டும் திண்ணப்பாகார்னரிலிருந்து நேரடியாக பஸ் நிலையம் வந்து மைதானத்தை அடைகிற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தயாராக நின்றிருந்த நடுவர்கள், பந்தய இலக்கினை வெற்றிகரமாக எட்டிய முதல் நான்கு வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்தனர். இதற்கிடையே கரூர் அட்லஸ் கலையரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது. இதில் 11, 15, 19 வயது மற்றும் வயதுவரம்பின்றி பொதுமக்களுக்கும் என 4 பிரிவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மாலையில், ஜெயலலிதா பிறந்தநாள் போட்டிகளில் ஒன்றிய, நகர மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கீதா எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். இதில் கபடி மற்றும் கிரிக்கெட்டில் ஒன்றிய, நகர அளவில் முதல் நான்கு இடம் பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம் எனவும், மாவட்ட அளவிலான போட்டியில் முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்பட்டன. சதுரங்க போட்டியில் முதல் ஐந்து இடம் பிடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டிகளில் முதல் ஐந்து இடம் பெற்ற ஆண், பெண்களுக்கு ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. மொத்தம் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 1,302 பேருக்கு ரூ.45 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கே.கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், முன்னாள் மாணவரணி செயலாளர் என்.தானேஷ், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணி உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story