ஜல்லிக்கட்டில் போட்டிபோட்டு காளைகளை அடக்கிய வீரர்கள் பார்வையாளர்கள் உள்பட 29 பேர் காயம்
மஞ்சம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில், பார்வையாளர்கள் உள்பட 29 பேர் காயம் அடைந்தனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதற்காக தேவாலயம் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் தாரை, தப்பட்டையுடன் தண்ணீர் குடம் எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு, தாசில்தார் சித்ரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டில் மொத்தம் 614 காளைகளும், 281 வீரர்களும் பங்குபெற அனுமதிக்கப்பட்டனர்.
ஊர் வழக்கப்படி, முதலில் செவலூர் சின்னாக்கவுண்டரின் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் வந்த காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று விளையாடி அடக்க வந்தவர்களை விரட்டியடித்தன. சில காளைகள், வீரர்களை பந்தாடின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், சைக்கிள், பீரோ, பாத்திரங்கள், ஆட்டுக்குட்டி, மூக்குத்தி என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டித்தள்ளியதில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 29 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மேற்பார்வையில் போலீசார், விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா என கண்காணித்தனர். ஜல்லிக்கட்டை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.
Related Tags :
Next Story