வீடு, வீடாகச்சென்று குப்பை சேகரிக்க 12 பேட்டரி வாகனங்கள்


வீடு, வீடாகச்சென்று குப்பை சேகரிக்க 12 பேட்டரி வாகனங்கள்
x
தினத்தந்தி 11 Feb 2019 4:00 AM IST (Updated: 11 Feb 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

வீடு, வீடாகச்சென்று குப்பைகள் சேகரிக்க 12 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதனை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இயக்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சி,

வீடு, வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் திட்டத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களுக்கு துப்புரவுப் பணியாளர்கள் தினசரி குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து சேகரித்து வருகின்றனர். இதற்கு தள்ளு வண்டிகளை பயன்படுத்துகின்றனர். இதற்காக 150 தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த தள்ளு வண்டிகள் மூலம் குப்பைகளை சேகரிப்பதில் துப்புரவுப் பணியாளர்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் கால விரையமும்ஏற்பட்டு வந்தது. இதற்கு மாற்றாக பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகளைச் சேகரிக்க நகராட்சிநிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக முதல் கட்டமாக 12 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த பேட்டரி வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் துப்புரவுப்பணியாளர்கள் எளிதாக பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த நிலையில் தள்ளு வண்டிக்கு மாற்றாக பேட்டரி வாகனங்களில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் திட்டம் தொடக்க விழா நகராட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. விழாவில் சட்டப் பேரவை துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு ஒரு வாகனத்தை இயக்கி, திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.மேலும் பொள்ளாச்சி நகராட்சிபகுதியில் வீடுகள், கடைகள், அலுவலகங்களுக்கு கதவு எண், உரிமையாளர் பெயர், வார்டு எண், தெருபெயர், சொத்து வரி, குடிநீர் வரி விதிப்பு எண், மின் இணைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து எழுதப்பட்ட போர்டு பொருத்தும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், நகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story