நண்பரின் திருமணத்திற்கு சென்றபோது சம்பவம்: கிணற்றுக்குள் விழுந்த தொழிலாளியின் கதி என்ன? தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள்
சேவூர் அருகே நண்பரின் திருமணத்திற்கு சென்ற தொழிலாளி கிணற்றுக்குள் விழுந்தார். எனவே அவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இதையடுத்து அவரை தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள்.
சேவூர்,
அவினாசியை அடுத்த சேவூர் வையாபுரி கவுண்டம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 31). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்த அய்யப்பன். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொள்ள கணேசமூர்த்தி நேற்றுமுன்தினம் இரவு தனது மற்றொரு நண்பரான பூபாலன் என்பவருடன் தண்ணீர் பந்தல்பாளையம் சென்றார். பின்னர் அங்கிருந்து மணமகளின் ஊரான கேரளாவுக்கு செல்ல மணமகனின் வீட்டார் ஆயத்தமானார்கள்.
அதன்படி நேற்று அதிகாலை 4 மணிக்கு தண்ணீர் பந்தல்பாளையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல மணமகனின் வீட்டார் வேனில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது கணேசமூர்த்தி மட்டும், இயற்கை உபாதையை கழிக்க வேனில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் டமார் என்று சத்தம் கேட்டது. இதற்கிடையில் வேனில் ஏறிக்கொண்டிருந்தவர்கள், கிணற்றுக்குள் டமார் என்று சத்தம் கேட்டதே என்று டார்ச் லைட் மூலம் கிணற்றுக்குள் அடித்து எட்டிப்பார்த்தனர். 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் 60 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் உள்ளது. அப்போதுதான் கிணற்றுக்குள் இருந்து ‘‘ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் ’’ என கணேச மூர்த்தி அபயக்குரல் எழுப்பினார்.
உடனை அங்கிருந்தவர்கள் கணேசமூர்த்தியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதற்குள் தண்ணீருக்குள் கணேசமூர்த்தி மூழ்கினார். உடனே இதுகுறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் காலை 6 மணிக்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி கணேசனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சரியான உபகரணங்கள் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் தேடினார்கள். எனவே நேற்றுமாலை 4 மணி வரை கணேசமூர்த்தியின் நிலை என்ன என்று தெரியவில்லை.
இதை தொடர்ந்து தனியார் போர்வெல் வைத்திருப்போரின் உதவியுடன் அவர்கள் வைத்திருக்கும் நீரில் மூழ்கும் கேமராவை கிணற்றுக்குள் போட்டு மானிட்டர் கருவி மூலம் பார்த்தார். ஆனால் 60 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் கேமராவில் தெரியவில்லை. இது தொடர்ந்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. தொடர்ந்து கணேசமூர்த்தியை நேற்றுமாலை 6 மணி வரை தேடினார்கள். அதன்பிறகு இருட்ட தொடங்கி விட்டதால் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தேடும் பணியை தொடங்க உள்ளனர். நண்பரின் திருமணத்திற்கு சென்றவர் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.