ஈரோட்டில் இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்
ஈரோட்டில் நடந்த இளையராஜா இன்னிசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
ஈரோடு,
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் 75–வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்னிசை நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ‘எப்போதும் ராஜா’ என்ற பெயரில் இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பி.சி.துரைசாமி, இயக்குனர் சாந்தி துரைசாமி, டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத்தலைவர் யு.ஆர்.சி.தேவராஜன், நிர்வாக இயக்குனர் ராஜசேகர், இயக்குனர் டி.பி.குமார், உமாராஜசேகர், ரூபாகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பாடல்களை பாடினார். பாடல்களுக்கு இடையே அவர் பேசும்போது கூறியதாவது:–
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த புத்தக திருவிழாவில் நான் கலந்துகொண்டு பேசியபோது, தமிழகத்தில் எந்த குக்கிராமத்திலும் எனது பாதம் படாத இடம் கிடையாது என்று கூறினேன். மேலும், எனது இசைக்குழுவினருடன் ஈரோட்டிற்கு வந்து இசை நிகழ்ச்சி நடத்துவேன் என்று வாக்கு கொடுத்தேன். இன்றையதினம் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் உங்களது காது குளிர, மனம் குளிர, இதயம் குளிர, உயிர் குளிர இன்னிசை பாடல்கள் இடம் பெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்–பாடகிகள் ஹரிசரண், சித்ரா, மனோ, பிரசன்னா, மதுபாலகிருஷ்ணன் உள்பட பலர் பாடினார்கள். நிகழ்ச்சியில் அங்கேரி நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் லாஸ்லோ கோவாச் தலைமையிலான இசைக்குழுவினர் 40 பேர் இசையமைத்தனர். மேலும், 100–க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு இசைக்கருவிகளை மீட்டனர்.
நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனங்கள் சார்பில் ஏலக்காய்கள் மூலமாக செய்யப்பட்ட செங்கோல் இளையராஜாவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு ஆளுயர மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒய்.ஜி.மகேந்திரன் கலந்துகொண்டு இளையராஜாவை பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகம் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் மதுவந்தி, அருண் மீடியாஸ் உரிமையாளர் அருண் உள்பட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.