கடலூர் மத்திய சிறையில் வார்டர்களிடம் டி.ஐ.ஜி. விசாரணை


கடலூர் மத்திய சிறையில் வார்டர்களிடம் டி.ஐ.ஜி. விசாரணை
x
தினத்தந்தி 11 Feb 2019 4:15 AM IST (Updated: 11 Feb 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மத்திய சிறையில் வார்டர்களிடம் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி விசாரணை நடத்தினார்.

கடலூர் முதுநகர்,

கடலூர் மத்திய சிறையில் வார்டர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் அருள்ராஜ், செல்வேந்திரன். கடந்த 2-ந்தேதி அருள்ராஜ் தனது நண்பர் டி.வி.புத்தூரை சேர்ந்த தினேஷ்குமாருடனும், செல்வேந்திரன், பிரவீன்ராஜ் என்பவருடனும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்துக்கு சென்றனர். புதுக்கூரைப்பேட்டை என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்ற ஆனந்தவள்ளி என்பவர் மீது அருள்ராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஆனந்தவள்ளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய மதுபாட்டில்களை 4 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்ததும், அதனால்தான் விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் விருத்தாசலம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சிறை வார்டர்கள் அருள்ராஜ், செல்வேந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி நேற்று முன்தினம் காலை கடலூர் மத்திய சிறைக்கு வந்தார். பின்னர் அவர், வார்டர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிறை வார்டர்கள், தொலை தூரத்தில் இருந்து ஏராளமான வார்டர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக பணியாற்றி வருவதாகவும், வாரம் முழுவதும் விடுப்பு இல்லாமல் பணியாற்றி வருவதாகவும், அதனால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், இதை தவிர்க்க வார்டர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

Next Story