போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடி; கைதான 3 பேரில் ஒருவர் தப்பி ஓட்டம் ரூ.25 லட்சம் பறிமுதல்
போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய வழக்கில் கொல்கத்தா போலீசார் கைது செய்த 3 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். கைதானவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் என்ற நவீன கருவிகளை பொருத்தி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் எடுப்பவர்களின் ரகசிய நம்பரை திருடி அதன்மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பணமோசடி செய்யும் கலாசாரம் சென்னை உள்பட தமிழகத்தில் நடந்து வருகிறது.
வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இதுபோன்ற மோசடியை தமிழகத்தில் அரங்கேற்றுகிறார்கள். இதுதொடர்பாக ஏராளமான பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட ஆசாமி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொல்கத்தா போலீசார் விசாரித்தார்கள்.
விசாரணையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த ஆசாமியின் கூட்டாளிகள் 3 பேர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்து வருவது தெரியவந்தது.
அதன்பேரில் கொல்கத்தாவில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர்கள் 3 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் மண்டல் (வயது 22), ஜூகேந்தர் குமார் மண்டல் (23), பாஸ்கர்குமார் (25) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மற்றும் 28 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப்பிறகு அவர்கள் 3 பேரையும் கோர்ட்டு அனுமதியுடன் கொல்கத்தா அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த 3 பேரில் பாஸ்கர் குமார் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவர், கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். கழிவறையில் இருந்து நைசாக அவர் தப்பி ஓடி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story