பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் பிரதமரிடம் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை


பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் பிரதமரிடம் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Feb 2019 10:45 PM GMT (Updated: 10 Feb 2019 10:21 PM GMT)

பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என பிரதமரிடம் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்திய பிறகு பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்தது. ஏற்றுமதிக்கான சலுகை சதவீதங்கள் குறைந்தது. பின்னலாடை தொடர்புடைய பல்வேறு துறைகளும் வரி விதிப்பிற்கு உள்ளாகின. இதில் திருப்பூரில் செயல்பட்டு வரும் பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

பூஜ்யநிலை சுத்திகரிப்பு திட்டத்தை திருப்பூரில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் மறுசுழற்சி முறையில் தினமும் சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் சாய ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இந்த திட்டம் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில்துறையினரை கவர்ந்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அற்புதமான இந்த திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் அளித்து ஊக்குவிக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 300 சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களை பயன்படுத்தி வருகின்றன. மொத்தமுள்ள சாய ஆலைகளில் 100 சாய ஆலைகள் தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் கொண்டு இயங்குகின்றன.

இந்த தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அளிக்கப்படுவது போன்று 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படவில்லை. இதனால் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் சிரமத்தை சந்தித்து கொண்டிருக்கின்றன. பொது சுத்திகரிப்பு நிலையங்களின் கீழ் இயங்கும் சாய ஆலைகள் மற்ற சாய ஆலைகளை விட 2 சதவீத அதிக விலை நிர்ணயிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

இதனால் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுபோல் சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கும் ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வந்தார். அப்போது அவரை நேரில் சந்தித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் ஒரு மனு கொடுத்தார்.

இது குறித்து சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் கூறியதாவது:–

பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி பெருமாநல்லூருக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் உள்பட பலருடன் நின்று கொண்டிருந்தோம்.

அப்போது அங்கு வந்த பிரதமரிடம் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்து சென்றார். விரைவில் இந்த வரி விதிப்பு குறைக்கப்படும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story