பழனி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


பழனி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 11 Feb 2019 4:15 AM IST (Updated: 11 Feb 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

பழனி, 

திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டாண்குளம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். அவருடைய மகள் மோகனபிரியா (வயது 20). இவரும், ஆயக்குடி பகுதியை சேர்ந்த பாண்டியராஜனும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் மணிமேகலை என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மோகனபிரியா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே மோகனபிரியாவுக்கு, பழைய ஆயக்குடி 7-வது வார்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கார்த்திக்கின் தோட்டத்தில் வைத்து அவரை மோகனபிரியா சந்தித்துள்ளார். அப்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கார்த்திக்கை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தோட்டத்தில் இருந்த பூச்சிமருந்தை மோகனபிரியா குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மோகனபிரியா இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கார்த்திக் மனம் உடைந்து காணப்பட்டார். பின்னர் அவர் மதுவில் பூச்சிமருந்தை கலந்து குடித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story