புதுச்சேரியின் வளர்ச்சிக்கு குந்தகம்: கிரண்பெடியுடன் சேர்ந்து ரங்கசாமி கூட்டு சதி நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு
புதுவையின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பெடி ஆகியோருடன் சேர்ந்து ரங்கசாமி கூட்டு சதி செய்வதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்று கூறியுள்ளார். அதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். நான் அவரை மோடியின் தம்பி என்று கூறியதை அவரும் வரவேற்று உள்ளார்.
மோடி இந்த நாட்டை குட்டிச்சுவராக்கினார். ரங்கசாமி புதுச்சேரியை குட்டிச்சுவராக்கினார். கடந்த 2½ வருடமாக ரங்கசாமி காணாமல் போய்விட்டார். அப்போதெல்லாம் சட்டமன்றத்துக்கு வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்றேன்.
புதுவைக்கு பிரதமர் மோடி பணம் தராதது, கிரண்பெடி தொல்லை கொடுப்பது போன்றவற்றுக்கு ரங்கசாமிதான் காரணம் என்பது இப்போது தெரிகிறது. அவரது உண்மையான விஸ்வரூபம் இப்போது தெரிகிறது. புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பெடியுடன் சேர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூட்டுசதி செய்து வருகிறார்கள்.
மில் தொழிலாளர்கள், அரசு சார்பு நிறுவன தொழிலாளர்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை வழங்க விடாமல் கவர்னரிடம் சொல்லி ரங்கசாமி தடுக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 4–ந்தேதி புதுவையில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற அணிகளின் தலைவர்களும் டெல்லிக்கு சென்று மாநில அந்தஸ்து தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கிரண்பெடியையும் திரும்பிச் செல்ல வலியுறுத்தினோம். கடந்த 2011–ம் ஆண்டு ரங்கசாமி ரோடியர் மில் மைதானத்தில் மாநாடு நடத்தியபோது மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தினார்.
ஆனால் அவர் புதுவை மாநிலத்தில் ஆட்சியை பிடித்தபோது மாநில அந்தஸ்து தொடர்பாக எதையும் பேசவில்லை. எந்த பிரச்சினையை வைத்து ஆட்சிக்கு வந்தாரோ அதை ஆட்சிக்கு வந்ததும் கைவிட்டுவிட்டார். மாநில அந்தஸ்து தொடர்பாக நாங்கள் டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அதை புறக்கணித்த ரங்கசாமி ஒரு போலி சாமியார். மாநில அந்தஸ்து தொடர்பாக அவர் பேசுவதில் உண்மை இல்லை. மக்களை ஏமாற்றும் செயல்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது:–
டெல்லியில் நடந்த கூட்டத்தில் அனைத்து மாநில காங்கிரசாரும் தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளவேண்டும் என்று ராகுல்காந்தி அறிவுறுத்தினார். தேர்தல் அறிக்கையில் சேர்க்க மாநில அளவிலான கருத்துகளை எழுத்து வடிவில் கேட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரிக்கு வர இருக்கிறார். தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது புதுவையிலும் பேசப்படும்.
ஏற்கனவே தொகுதிவாரியாக நாங்கள் கூட்டம் நடத்தி வருகிறோம். தொகுதி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளோம்.
நான் டெல்லியில் இருந்தபோது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து பேசினேன். 7–வது நிதிக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதாற்காக அரசு ஊழியர் சம்பளத்துக்கு ரூ.1,400 கோடியும், பென்ஷன் வழங்குவதற்காக ரூ.1,100 கோடியும் கொடுக்கவேண்டும் என்றும் மானியத்தொகையை உயர்த்தி வழங்கவும் கேட்டேன். இதுதொடர்பாக வருகிற 14–ந்தேதி டெல்லியில் உள்துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. இதில் நமது மாநில தலைமை செயலாளர் கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து மத்திய அரசிடம் நாம் நிதி கேட்டாலும் தருவதில்லை. கோப்புகள் தாமதப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி திட்டங்களும் நிறுத்தப்படுகின்றன. மத்திய அரசு புதுவை மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. ஆனால் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு தாராளமாக நிதி கொடுக்கிறது. இந்த பாரபட்சம் ஜனநாயக நாட்டுக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.