பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ்-வேன் மோதல்; டிரைவர் பலி
பாவூர்சத்திரம் அருகே அரசுபஸ்-வேன் மோதிக்கொண்ட விபத்தில், வேன் டிரைவர் பரிதாபமாக பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாவூர்சத்திரம்,
செங்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன்(வயது40). இவர், தனது உறவினர்களுடன் அம்பை அருகில் கல்லிடைக்குறிச்சியில் உள்ள அண்ணன் வீட்டில் நேற்று மாலையில் நடந்த விழாவுக்கு வேனில் புறப்பட்டு சென்றார்.
வேனை செங்கோட்டையை சேர்ந்த வெங்கடாச்சலம்(50) என்பவர் ஓட்டினார். மாலை 5 மணியளவில் அம்பை-தென்காசி ரோட்டில் பாவூர்சத்திரம் அருகிலுள்ள எல்லைப்புள்ளி விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே கடையத்தில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக வேன் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் வேன், பஸ் ஆகியவற்றின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. வேன் டிரைவர் வெங்கடாச்சலம் மற்றும் அதில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்று காயங்களுடன் கிடந்த டிரைவர் மற்றும் 10 பேரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி வேன் டிரைவர் வெங்கடாச்சலம் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 10 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story