தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் ‘அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்’
‘தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம்‘ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. எப்போதும் ஜனநாயகத்தை மதிக்கின்ற கட்சி. அ.தி.மு.க.வில் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவது போன்றவற்றுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களின் கருத்துகளை கேட்டறிந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இணைந்து இறுதி முடிவை எடுப்பார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
இந்தியாவிலேயே நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே விருப்ப மனுக்களை பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க.தான். நாங்கள் எப்போதும் எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளோம். கூட்டணியைப் பற்றி கவலை இல்லாமல், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை மகத்தான வெற்றி பெறச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story