செங்குன்றம் அருகே பட்டப்பகலில் ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை பதற்றம்-போலீஸ் குவிப்பு
செங்குன்றம் அருகே பட்டப்பகலில் ஐகோர்ட்டு வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த சோலையம்மன் நகர் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 47). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்தார். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார்.
நேற்று காலை 9 மணி அளவில் வக்கீல் சுரேஷ்குமார், வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அவரது வீட்டின் அருகே வந்தபோது, அங்கு மறைந்து இருந்த 2-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள், திடீரென வக்கீல் சுரேஷ்குமாரை சுற்றி வளைத்தனர். பின்னர் கத்தியால் அவரது தலையில் ஓங்கி அடித்தனர்.
இதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்தார். உடனே மர்மநபர்கள், கத்தியால் அவரது தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
அவர் இறந்துவிட்டதை உறுதி செய்த பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் வீட்டின் அருகேயே வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், இதுபற்றி சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, பொன்னேரி டி.எஸ்.பி. பிரவீன்குமார், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலையான சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் சுரேஷ்குமாருக்கும், அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அந்த பெண்ணின் சகோதரர், சுரேஷ்குமாரிடம் இது தொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்தார். தனது தங்கை உடனான கள்ளத்தொடர்பை துண்டிக் கும்படி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்த இளம்பெண் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்துவிட்டு சென்னையில் குடியேறி விட்டார்.
எனவே அந்த கள்ளக்காதல் விவகாரத்தில் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவருக்கு வேறு யாருடனும் வழக்கு தொடர்பாக முன்விரோதம் உள்ளதா?. அதன் காரணமாக யாராவது அவரை கொலை செய்தனரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட சுரேஷ்குமாருக்கு பியூலா(40) என்ற மனைவியும், 4 மாதத்தில் இரட்டைகுழந்தைகளும் உள்ளனர், சுரேஷ்குமார்-பியூலா தம்பதிக்கு திருமணமாகி கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் இரட்டை குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. சுரேஷ்குமாருக்கு சொந்த ஊர் சென்னை வியாசர்பாடி ஆகும்.
சுரேஷ்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகராக இருப்பதால் இந்த கொலையால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story