மாவட்ட செய்திகள்

சென்னையில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல் + "||" + in Chennai Diabetic patients Increase in number

சென்னையில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னையில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்னையில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு நோய் மருத்துவமனைகள் சார்பில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் நீரிழிவு நோய் தாக்கம் எப்படி இருந்தது? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 10 ஆயிரம் பேரிடம் ரத்த பரிசோதனை உள்பட பல்வேறு நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கடந்த 2006 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னையில் 18.6 சதவீதத்தில் இருந்து, 21.9 சதவீதமாக நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது. காஞ்சீபுரம் நகர்ப்புறத்தில் 16.4 சதவீதத்தில் இருந்து 20.3 சதவீதமாகவும், பண்ருட்டி கிராமப்புறத்தில் 9.2 சதவீதத்தில் இருந்து 13.4 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேபோல நீரிழிவு நோய், ஆரம்பகட்ட நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக ஏற்றம் கண்டுவருகிறது. நீரிழிவு நோய் தொடக்க நிலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை சென்னையில் 12.4 சதவீதத்தில் இருந்து 19 சதவீதம் ஆகவும், காஞ்சீபுரம் நகர்ப்புறத்தில் 6.1 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாகவும், பண்ருட்டி கிராமப்புறத்தில் 7.8 சதவீதத்தில் இருந்து 14.8 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது. இதன்மூலம் எதிர்காலங்களில் நீரிழிவு நோய் கணிசமாக அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது.

உடல் பருமன் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. சென்னையில் 16.3 சதவீதம் பேருக்கும், காஞ்சீபுரம் நகர்ப்புறத்தில் 26.4 பேருக்கும், பண்ருட்டி கிராமப்புற பகுதியில் 45.4 சதவீதம் பேருக்கும் உடல் பருமன் அதிகரித்துள்ளது. சென்னையில் 34 சதவீதம் பேருக்கும், காஞ்சீபுரம் நகர்ப்புறத்தில் 35.2 சதவீதம் பேருக்கும், பண்ருட்டி கிராமப்புற பகுதியில் 57.2 சதவீதம் பேருக்கும் தொப்பை அதிகரித்துள்ளது.

இதுபற்றி நீரிழிவு நோய் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் ஏ.ராமச்சந்திரன் கூறியதாவது:-

உடற்பயிற்சி குறைந்து, உடலின் இயக்கங்கள் குறைவது தான் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாகும். உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை ஆகியவை நீரிழிவு நோய்க்கான தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், பிள்ளைகள் பரிசோதனை செய்வது அவசியம். முன்கூட்டியே டாக்டர்களிடம் சென்று பரிசோதனை செய்தால், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.