போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி
போலீசாரை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கடந்த சில வாரங்களாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தீக்குளிக்க முயலும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆட்டோவில் தாய்-மகன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் 5 லிட்டர் மண்எண்ணெய் கேன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த மண்எண்ணெய் கேனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் போடி வினோபாஜி காலனியை சேர்ந்த மதுரை வீரன் மனைவி நாகரத்தினம் மற்றும் அவர்களுடைய மகன் ராஜா என்பதும், கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து நாகரத்தினம் கூறுகையில், ‘எனது மகன் போடியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த விபத்தில் எனது மகனின் இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அவனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அவனது படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு செய்து வருகிறார்கள்’. போலீசாரின் அலைக்கழிப்பை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்தோம்’ என்றார்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆட்டோவிலேயே தேனி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். போலீசாரை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story