விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு தண்ணீர் திறப்பு


விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 4:15 AM IST (Updated: 11 Feb 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

உத்தமபாளையம், 

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்பது லோயர்கேம்ப்பில் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை ஆகும். முல்லைப்பெரியாற்று தண்ணீரின் மூலம் இந்த பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக அறுவடை பணிகள் முடிந்தது.

பின்னர் 2-போக நெல் சாகுபடி நடந்தது. தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து பால்பிடிக்கும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திடீரென பாசனத்துக்காக தண்ணீர் செல்லக்கூடிய 17 வாய்க்கால்களையும் முன்னறிவிப்பு இன்றி திடீரென அடைத்தனர். இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பாசன விவசாயிகள் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியாக இருக்கும் வரை தண்ணீர் கொடுக்கலாம் என்று அரசாணை உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை அடைத்தது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் நிறைவேற்றி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்க தலைவர்கள் தர்வேஸ்மைதீன், பி.டி.ஆர்.விஜயதியாகராஜன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட துணை முதல்-அமைச்சர் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளை அழைத்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் விவசாயிகளுக்கு முறையான தகவல் இன்றி வாய்க்கால்களில் தண்ணீர் அடைத்ததற்கு அதிகாரிகளை கண்டித்தார்.

துணை முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், நேற்று கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சின்னவாய்க்கால் உள்பட 18 வாய்க்கால்களுக்கும் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்கள். இதனால் போராட்டம் நடத்தும் முடிவையும் விவசாயிகள் கைவிட்டனர். 

Next Story