5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை அரசு கைவிட வேண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்


5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை அரசு கைவிட வேண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 5:33 PM GMT)

மத்திய அரசு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்திடும் முயற்சியினை கைவிட வேண்டும், என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரமத்திவேலூர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் வரவேற்று பேசினார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பாலமுரளி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருக செல்வராஜன் ஜாக்டோ-ஜியோ போராட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் இடமாறுதல் செய்து வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டிப்பது, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு அலுவலர்கள் ஊதிய செலவினம் குறித்து தெரிவித்துள்ளதை இச்சங்கம் வரவேற்கிறது. மத்திய அரசு தனி நபர் வருமான வரி விலக்கினை ரூ.8 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 57 அங்கன்வாடி மையங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி நியமித்துள்ளத்தை இச்செயற்குழு கண்டிக்கிறது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்விக்கும், தொடக்கக்கல்விக்கும் போதிய நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்திடும் முயற்சியினை கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட துணை செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Next Story