ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி: கலெக்டர்அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி தொடர்பாக சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி சேனைக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது அவர்களுடன் வந்த வசந்தா, மாதம்மாள் என்ற 2 பெண்கள் திடீரென தாங்கள் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து அந்த பெண்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த ஒருவரிடம் மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 20 மாதம் பணம் கட்டினோம். ஏலச்சீட்டு முடிந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்கான பணத்தை தராமல் அவர் ஏமாற்றி வருகிறார். மேலும் அவரிடம் சென்று பணம் கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களை போன்று பலரிடம் அவர் சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்து உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இது குறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story