சின்னசேலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் - தொழிலாளி பலி
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள காளசமுத்திரம் தெற்குகாட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சென்னி வீரன் மகன் பெரியசாமி (வயது 43), தொழிலாளி. இவரும் குரால் வடக்குகாட்டுக்கொட்டாயை சேர்ந்த அங்கமுத்து மகன் பெருமாள்(40) என்பவரும் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றனர். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை பெருமாள் ஓட்டினார். காளசமுத்திரம் பிரிவுரோடு அருகே சென்ற போது, சேலத்தில் இருந்து செங்கற்கள் ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்த லாரி ஒன்று பெருமாள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெரியசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெருமாள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான பெரியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story