ஒட்டன்சத்திரத்தில், மயானத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை தடுக்க வேண்டும்
ஒட்டன்சத்திரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை தடுக்க வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில் நிலக்கோட்டை தாலுகா நடக்கோட்டை ஏ.டி. காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்படுகிறோம். எனவே விரைவில் நிலப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதேபோல் ஒட்டன்சத்திரம் 2-வது வார்டு பகுதி மக்கள் ஒரு மனு அளித்தனர். அதில், 2-வது வார்டு பகுதியில் அருந்ததியினருக்கான மயானம் உள்ளது. அந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு மயானத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டுக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் பகுதியில் யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்துவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
திண்டுக்கல் பாப்பணம்பட்டி அகரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் ஊரில் உள்ள மயானப்பகுதியில் சிலர் இரவில் புகுந்து டிராக்டர் மூலம் மண் அள்ளிச்சென்றுவிடுகின்றனர். இதனால் மயானப்பகுதியில் 30 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனு வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
மறுவாழ்வு கொடுத்த கலெக்டர்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா போடிகாமன்வாடியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் நாராயணசாமி (வயது 30). இவர், கடந்த 2015-ம் ஆண்டு கட்டிட வேலையில் ஈடுபட்ட போது கட்டிடம் அருகே இருந்த உயர் அழுத்த மின்சார கம்பி உரசியதில் அவருடைய 2 கைகளும் கருகின. இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு 2 கைகளும் அகற்றப்பட்டன. இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கக்கோரி கலெக்டரிடம் நாராயணசாமி மனு அளித்தார். அப்போது அவரின் நிலையை பார்த்த கலெக்டர் டி.ஜி.வினய், அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததுடன், மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்கவும் வழிவகை செய்தார்.
பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வேலையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலெக்டரை நேரில் சந்தித்த நாராயணசாமி, வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டதாக நினைத்து முடங்கி கிடந்த தனக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக கூறி கலெக்டருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். அப்போது அவருக்கு பொருத்தப்பட்ட கைகளை பார்வையிட்ட கலெக்டர், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story