ஜல்லிக்கற்களை மாலையாக அணிந்து கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மக்கள்
கல்குவாரியை மூட வலியுறுத்தி ஜல்லிக்கற்களை மாலையாக அணிந்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லை அடுத்த தெப்பக்குளத்துப்பட்டி அருகே தாதன்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிபாலன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். முன்னதாக அவர்கள் ஜல்லிக்கற்களை கயிற்றில் கட்டி மாலையாக்கி, பின்னர் அதனை அணிந்து கொண்டு கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதனை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ரெட்டியார்சத்திரம்-தாதன்கோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் பாறைகளை உடைக்க வைக்கப்படும் வெடிகள் வெடிக்கும் போது ஏற்படும் பயங்கர சத்தத்தால் எங்கள் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள் பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடுகளும் நோயால் பாதிக்கப்படுகின்றன. கல்குவாரிக்கு வரும் கனரக வாகனங்களால் சாலைகளும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனை தட்டிக்கேட்டால் கல்குவாரி உரிமையாளர் கொலைமிரட்டல் விடுக்கிறார். எனவே மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை.
இதனால் எங்கள் பிரச்சினையை தீர்க்க எங்களுக்கு வழி கிடைக்கவில்லை. இதே நிலை நீடித்தால் அங்கு வசிக்கும் மக்கள் இறக்கும் நிலை உருவாகும். எனவே எங்கள் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும் என்பதற்காக தான் ஜல்லிக்கற்களை மாலையாக அணிந்து, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளோம் என்றனர். இதையடுத்து அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க போலீசார் அனுமதித்தனர்.
Related Tags :
Next Story