சத்திரப்பட்டி அருகே, தலையூத்து அருவியில் பிணமாக கிடந்த மெக்கானிக்


சத்திரப்பட்டி அருகே, தலையூத்து அருவியில் பிணமாக கிடந்த மெக்கானிக்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 5:57 PM GMT)

சத்திரப்பட்டி அருகேயுள்ள தலையூத்து அருவி பகுதியில் பாறையின் இடுக்கில் மெக்கானிக் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்திரப்பட்டி, 

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியை அடுத்து தலையூத்து அருவி உள்ளது. அந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக நின்றது. இதை பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் சத்திரப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், வேடசந்தூர் தாலுகா தொட்டணம்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் சிலம்பரசன் (வயது 22) என்பவர் வேடசந்தூரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்ததும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர் பழுதுநீக்கத்துக்கு வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அருவி பகுதியில் சிலம்பரசனை தேடினர். அப்போது மேல் தலையூத்து பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, பாறையின் இடுக்கில் சிலம்பரசன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து பாறையின் இடுக்கில் சிக்கியிருந்த சிலம்பரசனின் உடலை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

பின்னர் அவரின் உடலை போலீசார் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் குளிக்கும்போது தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.

Next Story