தொடர் உண்ணாவிரதத்தால் உடல்சோர்வு: வேலூர் சிறை மருத்துவமனையில் நளினி அனுமதி திரவ உணவையும் ஏற்க மறுப்பு


தொடர் உண்ணாவிரதத்தால் உடல்சோர்வு: வேலூர் சிறை மருத்துவமனையில் நளினி அனுமதி திரவ உணவையும் ஏற்க மறுப்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:15 PM GMT (Updated: 11 Feb 2019 6:55 PM GMT)

வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த நளினிக்கு உடல் சோர்வு ஏற்பட்டதையடுத்து ஜெயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தும், இதுவரை கவர்னர் முடிவெடுக்கவில்லை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்கக்கோரி கடந்த 7-ந் தேதி முதல் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 5-வது நாளாக நேற்றும் முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதேபோன்று 7 பேரையும் விடுதலை செய்யக்கோரியும், கணவர் முருகனுக்கு ஆதரவாகவும் நளினி மத்திய பெண்கள் ஜெயிலில் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன், நளினி ஆகியோரின் உடல்நிலையை சிறை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் நளினிக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள், அவருக்கு திரவ உணவு கொடுத்தனர். ஆனால் அதனை குடிக்க நளினி மறுத்து விட்டார். அதைத்தொடர்ந்து அவர் ஜெயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story