இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருநங்கைகள் மனு
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருநங்கைகள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுவாக கொடுத்தனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கு சென்று அவர்களிடம் கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார்
கூட்டத்தில் கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேலூர் சைதாப்பேட்டை, கஸ்பா, சேண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்களுக்கு சொந்தமாக வீடுகள் இல்லை. அதனால் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வறுமை, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மேலும் சிலர் நாங்கள் திருநங்கைகள் என்பதால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கின்றனர். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வேலூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் தோப்பாசாமி அளித்த மனுவில், மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகம் சத்துவாச்சாரியில் உள்ளது. அங்கு திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கூடுதலாக 2 கட்டிடங்கள் கட்ட முடிவு செய்து, அதற்காக மண்டல அலுவலக வளாகத்தில் நிற்கும் 15 மரங்களை வெட்ட முடிவு செய்துள்ளனர். தற்போது கோடை காலம் தொடங்க உள்ளது. மரங்களை வெட்டினால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்கு கூட இடம் இல்லாமல் அவதிபடுவார்கள். எனவே மரத்தை வெட்டாமல் மூலைக்கொல்லையில் மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் காலி இடத்தில் திடக்கழிவு மேலாண்மை மைய கட்டிடம் கட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
வேலூர் வக்கீல்கள் பார் அசோசியேஷன் சங்க தலைவர் எஸ்.ஆர்.சண்முகம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், வக்கீல்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீடு வசதி செய்து கொடுக்க வேண்டும், பயிற்சி பெறும் இளம் வக்கீல்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், வக்கீல்கள் வீடு கட்ட அரசு குறைந்த விலையில் நிலம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூறியிருந்தனர். மேலும் அந்த மனுவை பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் மூலம் கலெக்டர் அனுப்பி வைக்கும்படி அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் ராஜபெருமாள் அளித்த மனுவில், ஆலங்காயம் வனச்சரகம் பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் அருகே வனவிலங்குகளின் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அது தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. கோடைக்காலம் வருதவற்கு முன்பு ஆழ்துளை கிணற்றை சரி செய்ய வேண்டும். இதேபோன்று மாவட்டம் முழுவதும் வனவிலங்குகளின் குடிநீருக்காக அமைக்கப்பட்டு பழுதான ஆழ்துளை கிணறுகளை வனத்துறையினர் பழுது நீக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
பெரியஅல்லாபுரத்தை சேர்ந்த திருநங்கைகள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள இடுகாட்டில் மயானக்கொள்ளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனநலம் குன்றிய 20 மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் ஓட்டுனர் உரிமம் அட்டை, வாகனத்தின் ஆர்.சி. புத்தக அட்டைகளை பயனாளிகள் 2 பேருக்கு கலெக்டர் ராமன் வழங்கி தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story