பா.ம.க. பிரமுகர் கொலையை கண்டித்து இன்று கடையடைப்பு அமைதி பேச்சுவார்த்தையில் பா.ஜனதா கட்சியினர் வெளிநடப்பு


பா.ம.க. பிரமுகர் கொலையை கண்டித்து இன்று கடையடைப்பு அமைதி பேச்சுவார்த்தையில் பா.ஜனதா கட்சியினர் வெளிநடப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 4:30 AM IST (Updated: 12 Feb 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. பிரமுகர் கொலையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ஜனதா மற்றும் பல்வேறு அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் உதவி கலெக்டர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருந்து பா.ஜனதா கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம், 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் (வயது48) என்பவரை கடந்த 5-ந் தேதி ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. திருபுவனம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொத்தம் 9 பேரை கைது செய்து உள்ளனர். ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக பா.ஜனதா கட்சி மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் அறிவித்தனர்.

இதையடுத்து கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி, போராட்டம் அறிவித்த பா.ஜனதா கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களை அழைத்து நேற்று அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், தாசில்தார்கள் ஜானகிராமன், ராஜேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செங்கமலக்கண்ணன், ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போராட்டக்குழுவின் சார்பில் பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜா, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாநில செயலாளர் பாலா மற்றும் சிவசேனா, விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் கடையடைப்பு போராட்டத்தை கைவிடவேண்டும் என போராட்டக்குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அறிவித்தபடி நாளை (இன்று) கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என கூறி விட்டு பா.ஜனதா கட்சியினர் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் நாளை (இன்று) கடையடைப்புக்கு ஆதரவு தர பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர். எனவே அறிவித்தபடி கடையடைப்பு போராட்டம் நடைபெறும். போராட்டத்தையொட்டி கும்பகோணத்தில் அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளது. காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, பல்வேறு வீதிகள் வழியாக மகாமகம் குளக்கரையில் நிறைவடைகிறது.

ஊர்வலத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். வருகிற 22-ந் தேதி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கும்பகோணம் வருகிறார். அவரது தலைமையில் ராமலிங்கம் இரங்கல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story