கோத்தகிரியில், வீட்டின் கதவை உடைத்து கரடிகள் அட்டகாசம்
கோத்தகிரியில் வீட்டின் கதவை உடைத்து கரடிகள் அட்டகாசம் செய்தன.
கோத்தகிரி,
கோத்தகிரி மிஷன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ்(வயது 52). இவர் தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஹரிதாஸ் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு தூங்க சென்றார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் முன்புற கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. உடனே தூக்கத்தில் இருந்து ஹரிதாஸ் எழுந்தார்.
பின்னர் வீட்டின் வெளிப்புற மின்விளக்கை எரியவிட்டு, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது 3 கரடிகள் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைய முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே செல்போன் மூலம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அனைவரும் அங்கு திரண்டு, தீப்பந்தம் காட்டி கரடிகளை விரட்டினர். அந்த கரடிகள் அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தன. வீட்டின் கதவை உடைத்து கரடிகள் அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கோத்தகிரி பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது வீட்டின் கதவை உடைத்து கரடிகள் உள்ளே நுழைய முயன்றுள்ளன. இதனால் எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள் நுழையும் கரடிகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்கவும், கோத்தகிரியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story