ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரிக்கை
ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுவாக அளித்தனர். அதன்படி மஞ்சூர் அருகே உள்ள தேனாடு அரசு ஆரம்பப்பள்ளி மாணவ -மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தேனாடு அரசு ஆரம்பப்பள்ளியில் 31 பேர் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. பின்னர் மாணவ- மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியை ஆகிய 2 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பணியிடமாற்றத்தை ரத்து செய்து, அவர்களை அதே பள்ளியில் மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி அருகே கேத்தி பாலாடா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதை தடுக்கக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் கேரட் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அறுவடைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.
அதனை தொடர்ந்து நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதற்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கிடையே கேத்தி பாலாடாவில் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 3 மணியளவில் கேரட் அறுவடை செய்ய தொழிலாளர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜீப்பில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கேரட் அறுவடை செய்வது நடந்து கொண்டு இருக்கிறது. ஆகவே காலை 6 மணிக்கு மேல் கேரட் அறுவடை செய்வதை நடைமுறைப்படுத்துவதோடு, நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
ஊட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிருஷ்ணன் அளித்த மனுவில், ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கடை வைத்து வியாபாரம் செய்து வந்தேன்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் அந்த கடையை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் வருமானம் இன்றி, குடும்பத்தை நடத்த கஷ்டமாக உள்ளது. எனவே மாற்றுத்திறனாளியான நான் கடை வைக்க இடம் தேர்வு செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story