வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் சோதனை செய்ததை கண்டித்து விவசாயிகள் தர்ணா
8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு நில எடுப்பு ஆட்சேபனை மனுக்கள் மீதான விசாரணைக்கு வந்த விவசாயிகளை தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் சோதனை செய்ததை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி,
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியானது. இதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரியாபாடி, இஞ்சிமேடு, மகாதேவிமங்கலம், நம்பேடு ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆட்சேபனை மனுக்களை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சேபனை மனுக்கள் மீதான விசாரணைக்கு வந்தவாசி தாலுகா அலுவலகத்திற்கு கடந்த மாதம் 21-ந்தேதி வந்த விவசாயிகள் விசாரணையை புறக்கணித்ததுடன், தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல், ஆட்சேபனை மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட விசாரணை 11-ந்தேதி நடைபெறும் எனவும், விசாரணைக்கு வரும்படி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று விவசாயிகள் வந்தவாசி பழைய பஸ்நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோட்டை மூலை வழியாக தாலுகா அலுவலகம் சென்றனர்.
தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை சோதனை செய்தனர். இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் போலீசார் சோதனை செய்ததை கண்டித்து தாலுகா அலுவலக பிரதான வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்ய முயன்றனர் ஆனால் சமரசம் ஆகாத விவசாயிகள் 5 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விசாரணைக்கு ஆஜராகாமல் விவசாயிகள் புறப்பட்டுச் சென்றனர்.
Related Tags :
Next Story