‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதிய 10 மாணவிகள் கலெக்டருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு


‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதிய 10 மாணவிகள் கலெக்டருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 9:30 PM GMT (Updated: 11 Feb 2019 7:58 PM GMT)

‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதிய 10 மாணவிகள் கலெக்டருடன் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுவோம்’, ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் ‘என் கனவு’ என்ற தலைப்பில் கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 508 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 940 மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தபால் அட்டை மூலமாக கடிதம் எழுதினர்.

அதில் ‘எங்களை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும்’, ‘சிறு வயதில் திருமணம் செய்து வைக்கக் கூடாது’, ‘ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும்’ என்றும் பல்வேறு லட்சியங்களை வலியுறுத்தி எழுதினர்.

இதில் சிறந்த முறையில் கடிதம் எழுதிய மாணவிகள் ஜெயபிரியா, மணிமேகலை, சமீனா, தனுசுயா, அபி, பாத்திமாபீவி, இசைவாணி, மோகனா, பிரியா, ராஜலட்சுமி ஆகிய 10 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களை நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தான் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்சென்றார். மேலும் அவர்கள் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு 10 மாணவிகளும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் மாணவிகளிடம் அவர்கள் எழுதிய கடிதங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

இதையடுத்து கலெக்டர் தனது காரில் 10 மாணவிகளையும் திருவண்ணாமலை வேங்கிக்கால் தொடக்கப்பள்ளியில் மாதிரி வகுப்பு தொடக்க நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிகளுடன் இணைந்து குத்து விளக்கேற்றி மாதிரி வகுப்பை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்திற்கு மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டர் மற்றும் அலுவலர்களுடன் மாணவிகளும் கலந்து கொண்டனர். பின்னர் மாணவிகளுடன் கலெக்டர் உணவு அருந்தினார். தொடர்ந்து மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டங்களிலும் மாணவிகளுடன் அவர் கலந்து கொண்டார். மாலை 7 மணியளவில் மாணவிகள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று மாணவிகள் தெரிவித்தனர்.

Next Story