சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் போலி ஜி.எஸ்.டி. ரசீது தயாரித்து ரூ.265 கோடி வரி ஏய்ப்பு மோசடி செய்தவர் ராஜஸ்தானில் கைது


சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் போலி ஜி.எஸ்.டி. ரசீது தயாரித்து ரூ.265 கோடி வரி ஏய்ப்பு மோசடி செய்தவர் ராஜஸ்தானில் கைது
x
தினத்தந்தி 11 Feb 2019 11:15 PM GMT (Updated: 11 Feb 2019 8:06 PM GMT)

சென்னையில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு போலியாக ஜி.எஸ்.டி. ரசீதுகள் தயாரித்து, ரூ.265 கோடி வரை வரி ஏய்ப்பு மோசடிக்கு காரணமாக இருந்தவரை ராஜஸ்தான் மாநிலத்தில் தனிப்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

பிராட்வே, 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பொருட்கள் ஏதும் வழங்காமல் ரூ.2 ஆயிரம் கோடி வரையில் போலியாக ஜி.எஸ்.டி. ரசீது தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.265 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பதாகவும் ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள், பல்வேறு இடங்களில் நடத்திய விசாரணையில் சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சுஜாராம் என்ற சுரேஷ் தேவாசி என்பவர்தான் பல்வேறு நிறுவனங்களுக்கு இதுபோல் போலியாக ஜி.எஸ்.டி. ரசீதுகளை தயாரித்து கொடுத்தது தெரிந்தது.

ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ஹர்சானந்த் தலைமையில் சுஜாராமை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை அதிகாரிகள் பல இடங்களில் சுஜாரமை தேடிவந்தனர்.

இந்த நிலையில் சுஜாராம், ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கடந்த வாரம் ராஜஸ்தான் விரைந்த தனிப்படை அதிகாரிகள், அங்கு பார்மர் மாவட்டம் சிவானா பகுதியில் பதுங்கி இருந்த சுஜாராமை கைது செய்தனர்.

மேலும் அவரை கடந்த 9-ந் தேதி அன்று ஜோத்பூர் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை கொண்டுவர அனுமதி வாங்கினர். இதையடுத்து நேற்று சுஜாராமை தனிப்படை அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து, பொருளாதார குற்றங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சுஜாராமை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை அதிகாரிகள், போலி ஜி.எஸ்.டி. ரசீதுகள் தயாரித்து, வரி ஏய்ப்புக்கு காரணமாக இருந்தது தொடர்பாக சுஜாராமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.2 ஆயிரம் கோடி போலி ஜி.எஸ்.டி. ரசீது மூலம் ரூ.265 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story