கலெக்டர் அலுவலகத்தில், விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில், விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 12 Feb 2019 3:45 AM IST (Updated: 12 Feb 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்றார்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். இந்தநிலையில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் மனைவி மகேஸ்வரி (வயது 43), தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அவர், நண்பகல் 12 மணியளவில் தற்கொலை செய்வதற்காக தான் மறைத்து கொண்டு வந்த விஷத்தை (சாணிபவுடர்) தண்ணீரில் கலக்கி மகள் கண்முன்னே குடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மகள் கதறினார்.

உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், மகேஸ்வரியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவர், தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசாரிடம் கூறியதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு எனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரிடம் கடன் வாங்கியிருந்த 2 பேர் பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது அவர்கள் எங்கள் மீது பொய் புகார் அளித்தனர். மேலும் எனது புகைப்படம் மற்றும் எனது கணவரின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.

இதுதொடர்பாக ரத்தினபுரி மற்றும் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு எனது மகளுடன் மனு அளிக்க வந்தேன். ஆனால் மனவேதனையில் விஷம் குடித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களின் உடைமைகளை சோதனையிடும் பணியில் 2 பெண் போலீசார், 2 ஆண் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், சோதனை நடத்திய பிறகே பொதுமக்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிப்பார்கள். இது போல் நேற்று மகேஸ்வரி கொண்டுவந்த பையை போலீசார் சோதனையிட்டு உள்ளனர். ஆனால் அப்போது எதுவும் சிக்கவில்லை. இதனால், போலீசாரின் சோதனையை மீறி ஒரு காகிதத்தில் சாணிபவுடரை மறைத்து மகேஸ்வரி எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது.

Next Story